×

பெண்கள், குழந்தைகளுக்கான சேவையை பாராட்டி கிரிஜா குமார்பாபுவுக்கு அவ்வையார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி,  2022ம் ஆண்டிற்கான அவ்வையார் விருதை கிரிஜா குமார்பாபுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் பெண்களுக்கான சேவையில் சிறந்து விளங்கும் பெண்மணிகளை கவுரவிக்கும் வகையில் ‘அவ்வையார் விருது’ தமிழ்நாடு அரசால்  வழங்கப்பட்டு வருகிறது.  இந்த விருது மகளிர் அதிகாரம், மதநல்லிணக்கம், மொழி, கலை, அறிவியல், ஊடகவியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி, சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்றியவர்களுக்கு, அவர்களின் சேவையை பாராட்டி 8 கிராம் தங்கப்பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், சால்வை மற்றும் பாராட்டு பத்திரமும் அளிக்கப்படுகிறது.

2022ம் ஆண்டிற்கான ‘அவ்வையார் விருது’ கிரிஜா குமார்பாபுவுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வைத்து வழங்கினார். அவர் இந்திய குழந்தைகள் நலச்சங்கம், இளைஞர் நீதி குழுமம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குழு மற்றும் மருத்துவ நெறிமுறை ஆலோசனைக்குழு ஆகிய குழுக்களில் உறுப்பினராக பணியாற்றி  செய்த சேவைகளுக்கும், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து  ஆற்றிய பணிகளுக்கும், பயிற்சியாளராக பல சமூக பணியாளர்களை உருவாக்கிய பெருமையையும் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.

Tags : Chief Minister ,MK Stalin ,Kirija Kumarpabu , Chief Minister MK Stalin presents award to Kirija Kumar Babu for her services to women and children
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...